சென்னை: பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த விமான நிலையத்தை இன்று மாலை திறந்து வைக்கிறார். பிரதமர் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி சென்னை விமான நிலையத்தின் வளாகத்திற்குள் உள்நாட்டு முனையம் மற்றும் சர்வதேச முனையம் ஆகியவற்றின் புறப்பாடு பகுதிகளை இணைக்கும் விதத்தில், அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் இன்று பிற்பகல் 2:50 மணியிலிருந்து மாலை 3:15 மணி வரை தற்காலிகமாக வாகனப் போக்குவரத்துகள் நிறுத்தப்படுகிறது.
எனவே இன்று சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச புறப்பாடு பயணிகள் பயண நேரத்திற்கு முன்னதாகவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து விடுவது நல்லது. ஆனால் அதே நேரத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையத்தில் வருகைப் பகுதிகளில் எந்த விதமான தடையும் இல்லை. எனவே புறப்பாடு பயணிகள் வருகை பகுதிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் வருகை தரைதளத்திற்கு வந்து லிப்ட்டுகள் மூலம் சர்வதேச மற்றும் உள்நாடு புறப்பாடு பகுதிக்கு மேலே செல்லலாம்.
சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த புதிய முனைய திறப்பு விழாவிற்கு முக்கிய பிரமுகர்கள் வர இருப்பதால் சென்னை விமான நிலையத்திற்கு வரும் வழியிலும் போக்குவரத்து தடை ஏற்படலாம். எனவே இன்று பிற்பகலில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் சிறிது நேரம் முன்னதாகவே சென்னை விமான நிலையத்திற்கு வருவதால் கடைசி நேரத்தில் ஏற்படும் சிரமங்களைப் பயணிகள் தவிர்க்கலாம் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: பிரதமர் வருகை எதிரொலி - போலீசாரின் கட்டுப்பாட்டில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்