கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பின்னர் முதுகலை பட்டப்படிப்புகளை முடிக்கும் போது, அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு ஆசிரியர் உயர் கல்வியில் ஒரு பட்டத்தை பெற்றால் அவருக்கு ஊக்க ஊதியமாக ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை கூடுதலாக ஊதியம் வழங்கப்படுகிறது.
இதற்கிடையில், தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் என ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோர் உயர்கல்வியை முடித்துள்ளனர்.
இந்நிலையில், ஆசிரியர்களின் உயர் கல்வி படிப்பை பின் தேதியிட்டு ஏற்க முடியாது என தொடக்க கல்வித்துறை கூறியுள்ளது. மேலும் தொடக்கக் கல்வித் துறையின் அனுமதி இல்லாமல் உயர் கல்வி படிப்பது தவறு. எனவே, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர். கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், துறையின் முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி படித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். கல்வித்துறையின் இந்த அறிவிப்பால் தமிழ்நாடு முழுவதும் உயர் கல்வி படித்து பணி புரிந்து வரும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.