சென்னை: தமிழ்நாட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து உணவு தானியப் பொருட்கள் வருகின்றன. அதேபோல, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருகின்றன. அண்மையில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை பெய்ததால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, தக்காளியின் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதன் விளைவாக தமிழ்நாட்டில் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்தது. சில வாரங்களாக சிறிது சிறிதாக விலையேற்றம் இருந்த நிலையில், கடந்த வாரம் தக்காளி விலை கிலோ நூறு ரூபாயைக் கடந்தது. அதன் பிறகு, 150 ரூபாய் வரை விலை உயர்ந்தது. தக்காளி மட்டுமல்லாமல், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பீன்ஸ் உள்ளிட்ட அன்றாடம் பயன்படுத்தும் பல காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்தது. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகளின் வரத்து 50 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது. இதனால், தொடர்ச்சியாக காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது.
ஏற்கனவே காய்கறிகளின் விலை உயர்வால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், தற்பொழுது மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்துக்கு வரும் மளிகைப் பொருட்களின் வரத்து குறைந்துள்ளதால், மளிகைப் பொருட்களின் விலை 8 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
குறிப்பாக, துவரம் பருப்பின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 118 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு, தற்போது 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கடந்த வாரம் 135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பாசிப்பருப்பின் விலை 150 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சீரகத்தின் விலை உச்சமடைந்துள்ளது. ஒரு கிலோ சீரகத்தின் விலை, 365 ரூபாயில் இருந்து 540 ரூபாயாக உயர்ந்துள்ளது. மிளகு கிலோவுக்கு 50 ரூபாய் உயர்ந்துள்ளது. மேலும், மிளகாய்த் தூள், சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நீட்டு மிளகாய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்து உள்ளது. அரிசி விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது. காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
துவரம் பருப்பை பொறுத்தவரையில் மகாராஷ்டிரத்தில் இருந்தே பெருமளவு வருகிறது. ஆனால், அங்கிருந்து உக்ரைன் நாட்டின் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெருமளவு அனுப்பி வைக்கப்படுவதால், இதர மாநிலங்களுக்கு அனுப்பப்படும் அளவு குறைந்திருக்கிறது. இதுவே துவரம் பருப்பின் விலையேற்றத்துக்கு காரணம் எனத் தெரிகிறது. வரும் நாட்களில் துவரம் பருப்பின் விலை இன்னும் உயரவே வாய்ப்புள்ளது என வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: Tomato price: வெயிலோடு விளையாடி, வெற்றித் தக்காளி பறித்த விவசாயி