சென்னை, அசோக் நகர் 79ஆவது செக்டார் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பாண்டியன் (வயது 45). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். பாண்டியன் கேஸ் ஏஜென்சி நிறுவனங்களுக்கு உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை (டிச.09) இவரது வீட்டிற்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று தாங்கள் காவல் துறையினர் என்று கூறியுள்ளனர். பின்னர் பாண்டியனிடம் நீங்கள் லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆகையால், உங்கள் வீட்டை சோதனையிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
உடனே பாண்டியன் என்னிடம் துப்பாக்கியே இல்லை, பின்னர் எதற்கு சோதனை என்று கேட்டுள்ளார். இதனை பொருட்படுத்தாத அந்தக் கும்பல் பாண்டியன் வீட்டு கதவைப் பூட்டிவிட்டு வீட்டில் சோதனை நடத்தினர்.
பின்னர் பீரோவிலிருந்த ரூ.12 லட்சம் ரொக்கம், 45 சவரன் தங்க நகை, பாண்டியனின் செல்போன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, அவர்களை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து வெளியே வந்த பாண்டியன் இது குறித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பணம், நகையுடன் தப்பி ஓடிய போலி காவலர்கள் கும்பலை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 80 லட்சம் மோசடி: ஊர் சுற்றிய உடன்பிறப்புகளுக்குச் சிறைவாசம்