சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி பதவியேற்றுக்கொண்ட ஏ.பி. சாஹியின் பதவிகாலம் டிச.31ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான கொலீஜியம் தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாகவுள்ள சஞ்சீப் பானர்ஜியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் இந்த பரிந்துரை மத்திய சட்ட அமைச்சகத்தால் ஏற்கப்பட்ட பிறகு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை சென்னை உயர் நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டார்.
![சென்னை உயர் நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதி நியமனம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-highcourtcjappointment-script-7204624_31122020164851_3112f_1609413531_407.jpeg)
சஞ்சீப் பானர்ஜி குறித்த விவரங்கள்:
1961ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி பிறந்த சஞ்சீப் பானர்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார். பின்னர், 1990ஆம் ஆண்டு வழக்குரைஞராக தனது பயணத்தை தொடங்கினார்.
கொல்கத்தா, டெல்லி, ஜார்க்கண்ட், அலகாபாத், மும்பை உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்குரைஞராக இருந்த அவர், சிவில், நிறுவன சட்டங்கள், சமரச தீர்வு, அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றில் கைத்தேர்ந்தவராக திகழ்ந்தார்.
2006ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருந்து வருகிறார்.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். அதேபோல, சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாகவுள்ள வினித் கோத்தாரியை குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யவும் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இதையும் படிங்க: தியாகிகள் பென்ஷன் வழங்க மறுப்பு தெரிவித்த விவகாரம் - மீண்டும் வழிவகை செய்ய புதுவை அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு