சென்னை: மதுரவாயல் அடுத்த கார்த்திகேயன் நகரைச்சேர்ந்தவர், உஷா (39). இவரது வீட்டிற்கு நேற்று (அக் 19) வந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர், வீடு வாடகைக்கு உள்ளதா என்று கேட்டுள்ளார். இதற்கு வீடு வாடகைக்கு இல்லை என உஷா பதிலளித்துள்ளார்.
இதனையடுத்து கழிவறையைப் பயன்படுத்திக் கொள்ளலாமா என்று கர்ப்பிணி கேட்டதையடுத்து, பரிதாபப்பட்டு அவரது வீட்டில் இருந்த கழிவறையை பயன்படுத்திக்கொள்ள உஷா அனுமதித்துள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அந்தப் பெண் வெளியே வராததால் சந்தேகமடைந்த உஷா உள்ளே சென்று பார்த்தபோது, அந்த கர்ப்பிணி வீட்டில் இருந்த பீரோவைத் திறந்து, அதிலிருந்த நகைகளை அவரது ஆடைக்குள் மறைத்துக்கொண்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக அவரை கையும் களவுமாக பிடித்த உஷா, அப்பெண்ணை மதுரவாயல் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பிடிபட்ட பெண் மதுரவாயல் ஜானகி நகரைச்சேர்ந்த மாலதி (29) என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் இவருக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு மகள் உள்ள நிலையில், தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக மாலதி உள்ளார். இந்த நிலையில்தான் வாடகைக்கு வீடு கேட்பதுபோல் சென்று, வீட்டிற்குள் இருந்த நகை, பொருட்களைத் திருடியுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: இளைஞரின் யுபிஐ மூலம் சட்டவிரோதமாக ரூ.1.52 கோடி பரிவர்த்தனை செய்த சீனர்கள்? - போலீசில் புகார்!