சென்னை: உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றன. மத்திய அரசின் கல்வி உதவித்தொகை மாநில அரசு மூலமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்தாண்டு முதல் மத்திய அரசின் இணையதளத்தில் மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்துவிட்டால், அவர்களுக்கான கல்வி உதவித்தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் லட்சுமி பிரியா கூறும்போது, "ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கருக்கு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதில், மத்திய அரசின் நிதிப் பங்கீட்டுடன் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டமும், மாநில அரசின் உயர்கல்வி சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டமும் அடங்கும்.
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்கள் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்படும் திட்டங்களாகும். இத்திட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர் மத்திய அரசின் இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதி திராவிடர் மாணவர்கள் scholarships.gov.in என்ற இணையதளத்திலும், பழங்குடியின மாணவர்கள் tribal.nic.in என்ற தளத்திலும் பதிவு செய்யலாம்.
2022-2023ஆம் ஆண்டு முதல் இத்திட்டங்களை செயல்படுத்த புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் கடந்த ஜனவரி 30ஆம் தேதி முதல் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. எனவே, ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆதார் எண், இணையவழியில் பெறப்பட்ட வருமான சான்று, சாதிச் சான்று உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் விண்ணப்பித்து போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்களில் பதிவு செய்யலாம்.
முந்தைய ஆண்டுகளில் கல்வி உதவித்தொகை பெற்று, தற்போது புதுப்பிக்கும் மாணாக்கர்களும் இந்த இணையதளத்தில் கட்டாயம் தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது சாதிச் சான்றிதழ் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும், அதனை சரி பார்க்கவும் வேண்டும். மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், கல்லூரிகளில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு சுமார் 4 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டி உள்ளது. அவர்களில் தற்போது வரை சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மீதமுள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை மேலும் எளிமையாக்கவும் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: நாளை குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு - 55,071 பேர் எழுதுகிறார்கள்!