தமிழ்நாட்டில் ஆபாச படம் பார்ப்பவர்களின் மூவாயிரம் பேர் கொண்ட பட்டியல் தயாராக உள்ளதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குநர் ரவி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் ஆபாச படம் பார்ப்போரிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாங்கள் அந்தப் பட்டியலில் உள்ளோமோ? அல்லது சிக்கிவிடுவோமோ? என்ற அச்சத்தில் உள்ளனர்.
மேலும், பலரும் ஆபாச படம் பார்ப்பதைத் தவிர்த்துவருகின்றனர். இந்த நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்ஸ்களும் காணொலிகளும் வெளியாகியுள்ளன.
இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் இவ்வாறு செயல்பட்டாலும், காவல் துறையின் எச்சரிக்கையை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு, காவல் துறையினர் போல் பேசி ஆபாச படம் பார்த்த நபரை தொடர்புகொண்டு மிரட்டி பணம் பறிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதற்கு ஆதாரமாக திருநெல்வேலியில் காவலர் போல் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆபாச படம் பார்க்கும் இளைஞரை செல்போனில் விசாரிப்பது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், அந்த இளைஞர் தனது தாய், தந்தையரிடம் தெரிவிக்க வேண்டாம். இனிமேல் ஆபாச படம் பார்க்க மாட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறுகிறார். ஆனால், அந்த நபர் இளைஞரை ஏழாயிரம் ரூபாய் நீதிமன்றத்தில் கட்ட வேண்டும். 'ஆபாச படம் பார்க்கத் தெரியுது, ஃபைன் கட்டத் தெரியாதா?' என்று கேள்வி எழுப்புகிறார்.
தற்போது இந்த ஆடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. ஆடியோவில் மிரட்டுவது குறித்து காவல் துறை தரப்பில் கேட்டபோது, 3000 பேர் கொண்ட பட்டியலில் உள்ளவர்கள் மாவட்ட வாரியாகப் பிரிக்கப்பட்டு, தகவல் அறிக்கை பதிவு செய்த பின்பு முறையாக அழைத்து விசாரிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தனர்.
இதுபோன்று திடீரென செல்போனில் தொடர்புகொண்டு காவலர்கள் விசாரிக்கமாட்டார்கள் எனவும் காவல் துறை கூடுதல் இயக்குநர் ரவி கூறினார்.
இதையும் படிங்க: சமூக வலைதளங்களை விட்டு விலகுகிறார் இயக்குநர் சுசீந்திரன் - இதான் காரணமாம்