சேலம் அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி, தன்னாட்சி அந்தஸ்துகோரி கடந்த பிப்ரவரி மாதம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும், பல்கலைக்கழக மானிய குழுவிற்கும் விண்ணப்பித்தது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்ச அளவில் மாணவர்கள் சேர்க்கை, தேர்ச்சி விகிதம் ஆகியவை இல்லை என்பதால் விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக்கழகம் நிராகரித்தது.
இந்த நிராகரிப்பு முடிவு குறித்த தகவலை பல்கலைக்கழக மானியக் குழுவிற்கும் தெரியப்படுத்தியது. இந்நிலையில் தங்கள் விண்ணப்பத்தை நிராகரித்த அண்ணா பல்கலைக்கழக உத்தரவை ரத்து செய்து, தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது தொடர்பான மனுவை பல்கலைக்கழக மானியக்குழு சுதந்திரமாக முடிவெடுக்க உத்தரவிடக்கோரி அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆர். சுரேஷ் குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, அன்னபூர்ணா கல்லூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கந்தன் துரைசாமி, தேர்ச்சி விழுக்காடு மற்றும் மாணவர்கள் சேர்க்கை அடிப்படையில் விண்ணப்பத்தை நிராகரித்தது தவறு என்றும், முழுமையான முடிவு எடுப்பதற்கு அதிகாரம் யூஜிசிக்கு மட்டுமே இருப்பதாக உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் தெளிவாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயகுமார், கல்லூரிக்கு இணைப்பு வழங்கும் அதிகாரம் பெற்ற பல்கலைக்கழகத்துக்கு அதன் செயல்பாடுகளைப் பொறுத்து, தன்னாட்சி அந்தஸ்து வழங்கலாமா? வேண்டாமா? என்று முடிவெடுக்கும் அதிகாரமும் இருப்பதாகத் தெரிவித்தார்.
யூஜிசி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரபு மனோகர், அண்ணா பல்கலைக்கழகம் எடுத்த முடிவு தொடர்பான விவரங்களைப் பெற்றுள்ளதாகவும், அவற்றையும், கல்லூரி சமர்ப்பித்த ஆவணங்களையும் பொறுத்து சுதந்திரமாக இறுதி முடிவெடுக்க இருப்பதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி சுரேஷ்குமார், நாட்டிலேயே தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு கல்வி சேவையில் சிறந்து விளங்குகின்ற நிலையில், உலகிலுள்ள சிறந்த 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவிலிருந்து ஒரு கல்வி நிறுவனம் கூட இடம்பெறவில்லை என்று தனது கவலையைப் பதிவு செய்தார்.
மேலும் தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது தொடர்பான விண்ணப்பத்தை யூஜிசி இரண்டு மாதத்தில் சுதந்திரமாக செயல்பட்டு முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.