சென்னை: சென்னையின் மெட்ரோ ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆந்திர எல்லை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையினால் கண்டலேறு-பூண்டி கால்வாய் வழியாக அணைக்கு நீர் வரத்து வந்து கொண்டிருகிறது.
சில நாள்களுக்கு முன் நீர் வரத்து 500 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 740 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அருகில் உள்ள குளம் மற்றும் கண்மாய்களுக்கு உபரி நீரை வெளியேற்றப்படுகிறது எனப் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அனைத்து மெட்ரோ ஏரிகளிலும் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், உபரி நீரை மற்ற மெட்ரோ ஏரிகளுக்கு திறந்துவிட முடியாத நிலை உள்ளது.
மக்கள் அச்சப்பட தேவையில்லை
ஏரியின் மொத்த அடி 140 ஆகும். இதில் நீரின் கொள்ளளவு தற்போதைய நிலவரப்படி 138.90 அடியாக உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து அதிகமாக வந்து கொண்டிருப்பதால் தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள குளங்களுக்கு உபரி நீர் திறந்து விடப்படுவதாக பொதுப்பணித்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏரியை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினார். மற்றொரு அலுவலர் கூறுகையில், "அனைத்து மெட்ரோ ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 11.757 டிஎம்சி ஆகும். தற்போதைய நிலவரப்படி 9.571 டிஎம்சி ஆக உள்ளது. அதாவது 2.186 டிஎம்சி தான் குறைவாக உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் 2 டிஎம்சி குறைவாக வைத்திருப்பது வழக்கம் " என்று தெரிவித்தார்.
அதிக தடுப்பணைகள் கட்ட முடிவு
இது குறித்து முன்னாள் சென்னை மண்டலத்தின் சிறப்பு முதன்மை பொறியாளர் அ. வீரப்பன் கூறுகையில், "கன மழை பெய்து உபரி நீரை திறக்கும் போது அது கடலுக்குத்தான் செல்லும். உபரி நீரை தடுக்க போதுமான கட்டமைப்பு இல்லை. தற்போது தமிழ்நாடு அரசு அதிக அளவில் தடுப்பணைகளை கட்ட முடிவு செய்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று. உபரி நீர் வீணாகாமல் தடுப்பதில் தடுப்பணைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசு உபரி நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: பெட்ரோலை துரத்தும் டீசல்.. 100-ஐ தாண்டிய அவலம்.. விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்..!