சென்னை: பண்டிகை காலங்களில் பல பகுதிகளில் இருந்தும் சொந்த ஊருக்கு திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகின்ற 2024ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய விரும்பும் மக்கள் நாளை (செப்.13) முதல் முன்பதிவு செய்யத் துவங்கலாம் என்றும், கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்காமல் சிரமப்படும் நிலையைத் தவிர்ப்பதற்காகவே 120 நாட்களுக்கு முன்னர் டிக்கெட் முன்பதிவு துவங்கப்படுவதாகவும், பொதுமக்கள் முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும்படி ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
2024-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ஆம் தேதி வருகின்றது. அதற்கு முன்னதாக மக்கள் பயணத்தை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக ஜனவரி 11-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் அதற்கான ரயில் டிக்கெட்டுகளை நாளை (செப்.13) முன்பதிவு செய்ய துவங்கலாம்.
ஜனவரி 12ஆம் தேதி சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் வருகின்ற செப்.14-ஆம் தேதி அதற்கான ரயில் டிக்கெட்டுகளையும், ஜனவரி 13-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள செப்.15-ஆம் தேதியும், ஜனவரி 14-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள செப்.16-ஆம் தேதியும், ஜனவரி 15-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள செப்.17-ஆம் தேதியும், ஜனவரி 16-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள செப்.18-ஆம் தேதியும், ஜனவரி 17-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள செப்.19-ஆம் தேதியும் முன்பதிவு துவங்குகிறது.
பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் சிரமப்படுவதை தவிர்க்க முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. மேலும் பண்டிகை காலத்தில் பயணிகளின் தேவை அதிகரிப்பிற்கு ஏற்ப எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக பெட்டிகளை இணைப்பதற்காக பணிகளை அதிகாரிகள் துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பொங்கல் பண்டிக்கான சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை (செப்.13) காலை 8 மணி முதல் துவங்குகிறது. இந்தியன் ரயில்வேயின் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் மூலமாகவோ அல்லது ரயில்வே டிக்கெட் கவுண்டர்களுக்கு சென்றோ டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டு உள்ளது.
முன்னதாக, நவம்பர் மாதம் 12-ஆம் தேதி வரும் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த ஜூலை மாதம் துவங்கிய சிறிது நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. பெரும்பாலான ரயில்களின் குறிப்பிட்ட எண்ணிக்கையையும் விட தாண்டியதால் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை - மதுரை வழித்தடத்தில் இயங்கும் ரயில்களில் முன்பதிவிற்கு அதிக டிமாண்ட் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பயணிகளின் பணிவான கவனத்திற்கு: சென்னை சென்ட்ரலில் புறப்படும் சில ரயில்கள் ரத்து!