சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரிந்த கௌரவ விரிவுரையாளர்கள் 1131 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நேற்று(அக்-6) முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் திமுகவின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருந்திருந்தால் தங்களுக்கு இதுபோன்ற நிலை வந்திருக்காது எனவும், முதலமைச்சர் தங்களுக்கு ஏதாவது ஒரு மாற்றுப் பணி நிரந்தரமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள 52 அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக இருந்த விரிவுரையாளர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2400 ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஏற்கனவே கௌரவ விரிவுரையாளர்களாக பணிபுரிந்தவர்கள் பணியில்லை என அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று முதல் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தாங்கள் அனைவருக்கும் ஏதாவது நிரந்தர மாற்றுப் பணி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று (அக்-6) காலை முதல் இரவும் மழையிலும் குளிரிலும் தொடர்ந்து தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட விரிவுரையாளர்கள் கூறும் பொழுது, பகுதி நேர விரிவுரையாளர்களாக பாலிடெக்னிக் கல்லூரியில் பணிக்கு சேர்ந்தோம். அப்பொழுது தங்களுக்கு மணிக்கணக்கில் ஊதியம் வழங்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு முதல் தொகுப்பு ஊதிய அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் தங்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆசிரியர்களுக்காக பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் வழங்கினார். நாங்கள் தொடர்ந்து மாணவரின் நலன் கருதி கற்பிக்கும் பணியில் தீவிரமாக செய்து வந்தோம். வகுப்புக்கு செல்வதில் விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து மாணவர்கள் நலன் கருதி கற்பிக்கும் பணியில் மட்டுமே ஈடுபட்டு வந்ததால் தங்களால் போட்டி தேர்வுக்கு தயாராகி தேர்ச்சி பெற முடியவில்லை. தற்பொழுது உள்ள முதலமைச்சர் எங்களின் கோரிக்கையை ஏற்று ஏதாவது ஒரு மாற்றுப் பணி நிரந்தரமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:நாட்டு துப்பாக்கி தயாரித்த விவகாரம்: சேலம் அருகே என்ஐஏ சோதனை