சென்னை: தமிழ்நாட்டில் 406 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள், 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 7 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது. ஆனால், வேலைவாய்ப்பின்மை காரணமாக, அடுத்தடுத்த ஆண்டுகளில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை குறைந்தது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளை காட்டிலும், தற்போது பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதன்படி, 2020 - 2021 கல்வியாண்டில் 59,350, 2021 - 2022 கல்வியாண்டில் 56,801 மற்றும் தற்போதைய 2022 - 2023 கல்வியாண்டில் 68,891 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
தற்போதைய தொழிற்சாலைகளின் தேவைக்கு ஏற்ப ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், சிவில் உள்ளிட்ட துறைகளில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்குவதும் மாணவர் சேர்க்கை அதிகரிக்க காரணம் என உயர் கல்வித்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து டெக்னோகிரேட் இந்தியா காலேஜ் பைன்டர் நிறுவனத்தின் நிறுவனரும், கல்வியாளருமான நெடுஞ்செழியன் கூறுகையில், “நடப்பாண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்பது ஒரு தற்காலிக நிகழ்வாக மட்டுமே பார்க்க வேண்டும். கரோனா காலத்தில் மக்களின் பொருளாதார நிலைமை பாதிக்கப்பட்டதால், மாணவர்கள் பாலிடெக்னிக் படிப்பை தேர்ந்தெடுத்துள்ளனர்.
பொறியியல் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வை நேரடியாக நடத்தினால், மாணவர்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்ய முடியும். இதனால் பாலிடெக்னிக் படிப்பில் மாணவர்கள் சேர்வதும் குறையும். பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்சாலைக்கு தேவையான திறன்களுடன் பயிற்சி அளிக்க வேண்டும். தற்போது தொழிற்சாலைகளில் 4.0 என கூறுகின்றனர்.
ஆனால் பயிற்சியின்போது 2.0 வளர்ச்சியில் பயிற்சி அளிக்கிறோம். சிங்கப்பூரில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு 8.0 தொழிற்பயிற்சி அளிக்கின்றனர். மாணவர்களுக்கு தேவையான தொழிற்பயிற்சியை அளிக்க வேண்டும். பொறியியல் படிப்பில் சேராமல் மாணவர்கள் பாலிடெக்னிக் படிப்பில் சேர்ந்து விட்டு, பின்னர் உயர் கல்விக்கு மீண்டும் செலவிட வேண்டிய நிலை ஏற்படும்” என தெரிவித்தார்.
பாலிடெக்னிக் படிப்புகளில் கார்மெண்ட் டெக்னாலஜி, மெக்ட்ரானிக்ஸ், வேளாண் பொறியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளும் நடப்பாண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் நான் முதல்வன் திட்டம், திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கு பல்வேறு தொழிற்சாலைகள் உடனடி வேலைவாய்ப்பை வழங்குவதற்கும் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பெரியார் பல்கலை பேராசிரியர் நியமன முறைகேடு.. விசாரணை குழு அமைப்பு..