காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் தொடர்பான கண்டனக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. பேராசிரியர் அருணன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டனக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், 'ஜம்மு-காஷ்மீரில் நடைமுறையில் இருந்து வந்த 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது ஜனநாயக படுகொலையாகும். இதற்கான எந்தவிதமான விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் சட்டவிரோதமாக அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜம்மு காஷ்மீரில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் படிக்கக் கூடிய மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு கல்வி நிலையங்களுக்குச் செல்ல முடியவில்லை.
மருத்துவமனைக்கு பொதுமக்களால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். ஜம்மு-காஷ்மீரில் இன்னும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அங்கு வாழும் மக்களின் அடிப்படை உரிமைகள், வாழ்வாதாரம் முற்றிலும் நசுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இதுகுறித்து கொஞ்சம் கூட கவலைக்கொள்ளாமல் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மற்றும் மற்ற அமைச்சர்களும் ஜம்மு-காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை சகஜ நிலைக்கு வந்துவிட்டன என்று பொய்யான தகவல்களை மக்களிடம் பரப்பி வருகின்றனர்.
இந்தியாவில் மதச்சார்பின்மைக்கும், ஜனநாயகத்திற்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்தை நாம் காப்பாற்றியாக வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ‘ஒரே இந்தியா, வளமான இந்தியா’ - மோடி தலைமையில் ஆலோசனை!