தருமபுரி: தருமபுரியின் ஜரூர் தாலுகாவைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (24). இவர் ஆயுதப்படை காவலராகப் பணிபுரிந்துவருகிறார். தற்போது கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுவருவதால், எம்எல்ஏக்கள் பலர் வாலாஜா சாலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர்.
இதன் காரணமாக வேலுச்சாமி சேப்பாக்கம் விருந்தினர் அரங்கில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவந்தார். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி வழக்கம்போல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேலுச்சாமி, திடீரென தான் கையில் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் தொண்டை குழிப் பகுதியில் சுட்டு தற்கொலைக்கு முயன்றார்.
ஆன்லைன் ரம்மியில் ரூ.7 லட்சம் இழப்பு
அப்போது சத்தம் கேட்டு ஓடிவந்த காவலர்கள், வேலுச்சாமியை மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். துப்பாக்கி குண்டு மூளையை துளைக்காததால் நூலிழையில் உயிர் தப்பிய வேலுச்சாமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.
தொடர்ந்து வேலுச்சாமி தற்கொலை முயற்சிக்கான காரணம் காதல் தோல்வியா அல்லது குடும்பப் பிரச்சினையா எனப் பல கோணங்களில் திருவல்லிக்கேணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்தனர். இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டான ரம்மி கேமில் ஆர்வம் கொண்டவரான வேலுச்சாமி, அலைபேசி செயலியில் தொடர்ந்து பணம் கட்டி விளையாடிவந்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து ஏழு லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி ரம்மி விளையாட்டில் தோற்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வேலுச்சாமி, துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை நீக்கப்பட்ட சிறிது காலத்தில், இதுபோன்ற சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: உலக அழகு தினம் - மனிதத்தின் வித்து!