சென்னை: ஆவடி அருகே தனியாக நின்ற காரிலிருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கஞ்சா கடத்திய நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை ஆவடியை அடுத்த பாலவேடு, ஏ.என்.எஸ் நகரில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் கார் ஒன்று தனியாக நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் முத்தாபுதுப்பேட்டை காவல்துறையினர் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து உதவி ஆய்வாளர் மணிசேகர் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இதன்பின்னர், காவல்துறையினர் அந்த கார் கதவை திறந்து உள்ளே சோதனை செய்தனர். அப்போது, காரில் இருந்த பிளாஸ்டிக் சாக்கு மூட்டையை கீழே இறக்கி பார்த்த போது, பிளாஸ்டிக் கவரில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
இதன் மொத்த எடை 7 கிலோவாகும். பின்னர் கார், கஞ்சாவை பறிமுதல் செய்து முத்தா புதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆய்வாளர் ஜெய்சங்கர் தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காரின் பதிவு எண்ணை வைத்து யாருடையது என விசாரணை நடத்தினர். அப்போது கார் சென்னை பாடி புதுநகரைச் சேர்ந்த செல்வம் என்பவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஏஜென்சி மூலம் அந்தக் காரை திருத்தணியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு விற்று விட்டதாகக்கூறினார். அந்தப் பெண் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட பெண்ணை பிடித்த பின்னர் தான், கஞ்சாவை கடத்திய நபர்கள் குறித்த தகவல்கள் தெரியவரும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வீட்டில் புகுந்து பைக்கை திருடி செல்லும் இளைஞர் - சிசிடிவியில் பதிவான காட்சி!