கி.பி. பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால நடராசர் சிலை, மிகவும் தொன்மையான பார்வதி சிலை, மிகவும் அரிதான ராவணன் சிலை என ஒன்பது தொன்மைவாய்ந்த சிலைகள் உள்பட 12 சிலைகளை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதி ஒன்றில் இருக்கும் கடையிலிருந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் அதிரடியாக மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக அசோக் நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஏடிஜிபி ஜெயந்த் முரளி செய்தியாளரைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "மிகவும் தொன்மையான சிலைகளை வாங்கும் பழக்கம் உடைய நபர் ஒருவர் மூலம், மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் இஸ்லாமியர் ஒருவர் தொன்மையான பார்வதி சிலை ஒன்றை விற்பனை செய்ய உள்ளதாகத் தகவல் கிடைத்தது.
சொகுசு விடுதி
இந்தத் தகவலை அடிப்படையாக வைத்து ஒரு மாத காலம் மகாபலிபுரத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இறுதியாக ஐடியல் பீச் ரிசார்ட் என்ற சொகுசு விடுதியில் இந்தியன் காட்டேஜ் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் பெயரில் கடை வைத்து காஷ்மீர் பொருள்களை விற்பனை செய்யும் ஜாவித் ஷா என்பவர் சிலைகளை விற்பனை செய்துவருவதை அலுவலர்கள் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் அதிரடியாக சொகுசு விடுதிக்குச் சென்று ஜாவித் ஷா கடைக்குள் நுழைந்தனர். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் ஜாவித்திடம் விசாரணை மேற்கொண்டதில், பாதாள ரகசிய அறை ஒன்றில் 11 சிலைகளை மீட்டுள்ளனர். பின்னர் காவல் துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் மண்ணுக்குள் புதைத்துவைத்திருந்த பழங்கால பார்வதி சிலையை மீட்டனர்.
பார்வதி சிலை
தொல்லியல் துறை அலுவலர்களை வரவழைத்து ஆய்வுமேற்கொண்டதில், ஒன்பது மிக தொன்மைவாய்ந்த சிலைகள் இருப்பதை உறுதிசெய்தனர். மீதமுள்ள மூன்று சிலைகளும் உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பறிமுதல்செய்த சிலைகள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் கி.பி. 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு நடராஜர் சிலையும், மிகவும் தொன்மைவாய்ந்த பார்வதி சிலையும், மிகவும் அரிதான பத்து தலை ராவணன் சிலையும், சுழலும் தன்மைகொண்ட புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர் சிலையும், நர்த்தன விநாயகர் சிலையும், 2 சிவன் சிலையும், அர்த்தநாரீஸ்வரர் சிலையும், பெண் தெய்வ உலோக சிலையும், பெண் உலோக சிலையும் என 12 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதில் சில சிலைகள் மண்ணில் புதைக்கப்பட்டு மறைத்துவைக்கப்பட்டிருந்தன.
தொன்மையான சிலை
இதன் மதிப்பு சுமார் 40 கோடி ரூபாய் எனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஜாவித் ஷாவை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் கைதுசெய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், 30 வருடமாக சிலை கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
பி.காம் பட்டதாரியான ஜாவித் கடந்த ஐந்து வருடமாக மகாபலிபுரத்தில் ஐடியல் சொகுசு விடுதியில் காஷ்மீரி பொருள்களை வைத்து விற்பனை செய்வதுபோல் தொன்மையான சிலைகளை, ரிசார்டிற்கு வரக்கூடிய வெளிநாட்டவருக்கு விற்று சிலை கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
தஞ்சாவூரில் இதேபோன்று ஒரு கடையை வைத்து நடத்திவந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கரோனா காரணமாக இந்தத் தொன்மையான சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்த சவாலாக இருந்ததால், பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
சிலை கடத்தல்
குறிப்பாக மகாபலிபுரத்தில் சுற்றிப் பார்ப்பதற்காக வரும் வெளிநாட்டவர்கள் இடம், தொன்மையான சிலைகள் வாங்குபவர்கள் எளிதில் அணுகி விற்பனை செய்வதற்காக இந்த இடத்தில் தொன்மையான சிலைகளை மறைத்துவைத்து விற்பனை செய்துவந்தது தெரியவந்துள்ளது.
ஜாவித் ஒப்படைப்பதாக தெரிவித்த இன்னும் நான்கு சிலைகளை ஒப்படைக்கவில்லை. ஜாவித் மட்டும் அல்லாது சிலை கடத்தல் விவகாரத்தில் உடந்தையாக ஜாவித்தின் சகோதரர் ரியாஸ் என்பவரும் செயல்பட்டது தெரியவந்துள்ளது. காஷ்மீரில் பதுங்கியிருக்கும் அவரையும் தேடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன" என்றார்.
கோயில்களுக்குச் சொந்தமானவை
இந்தச் சிலைகள் அனைத்தும் இந்து அறநிலையத் துறையில் பதிவுசெய்யப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. இந்தச் சிலைகள் எந்தக் கோயில்களுக்குச் சொந்தமானவை என்பதைக் கண்டுபிடிக்கும் பணியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக மிகவும் அரிதான ராவணன் சிறை முதன்முறையாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் மீட்டுள்ளனர். பத்து தலை ராவணன் சிலை பின்புறம் சீதை வீற்றிருப்பதுபோல் அமைந்துள்ள அரிதான சிலை என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் விதிஷா, மான்சூர், ஆந்திராவில் காக்கி நாடா, உத்தரப் பிரதேசத்தில் தர்ஷ்ணன் கோயில், நொய்டாவில் உள்ள ராவணன் கோயில் என ஐந்து ராவணன் கோயில்களே உள்ளன.
கடத்தப்பட்ட சிலையா
இந்த ஐந்து கோயில்களில் எந்தக் கோயிலுக்குச் சொந்தமானது என விசாரணை மேற்கொண்டுவருவதாகவும், மேலும் இலங்கையில் ராவணன் மிக முக்கிய அரசனாகப் பார்க்கப்படுவதால், இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட சிலையா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுவருவதாகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சிலை கடத்தல்காரர் ஜாவித் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள், கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிலைகளை ஒப்படைத்து, ஜாவித் ஷாவை சிறையில் அடைக்க உள்ளனர். மேலும் ஜாவித் ஷாவை காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக பல தொன்மையான சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்தி விற்பனை செய்ததில், எத்தனை சிலைகள் விற்றுள்ளார். யார் யாருக்கெல்லாம் ஜாவித்துடன் தொடர்பு உள்ளது எனவும் விசாரணை செய்ய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் முடிவுசெய்துள்ளனர்.
இதையும் படிங்க: பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்படும் டிஎன்பிஎஸ்சி விடைத் தாள்கள்