சென்னை: காவலர்களுக்கான குடியிருப்பில் சொகுசாக காவல்துறையினர் வாழ்வதாக நினைக்கிறார்கள். ஆனால், குடிசையில் வாழ்வதை விட மோசமாக வாழ்ந்து வருகிறோம் என காவலரின் குடும்பத்தினர் ஆதங்கம் தெரிவித்து உள்ளனர். அதிகாரிகள் வருவார்கள், பார்ப்பார்கள், செல்வார்கள் ஆனால், நடவடிக்கை எதுவும் எடுத்ததில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வருபவர் பேச்சிமுத்து. இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இவர் தனது தாய் சிதம்பரம்(62) மற்றும் குடும்பத்துடன் கடந்த ஏழு வருடங்களாக கீழ்பாக்கம் லூத்ரல் கார்டன் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இன்று காலை பேச்சிமுத்து வழக்கம் போல பணிக்கு சென்ற நிலையில் பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கு சென்றனர்.
இந்நிலையில் மதியம் 12மணியளவில் பேச்சிமுத்தின் மனைவி சமையல் செய்து கொண்டிருந்த போது காவலரின் தாய் சிதம்பரம் உடல் நிலை சரியில்லாமல் வீட்டின் அறையில் படுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மேற்கூரை இடிந்து காவலரின் தாய் மீது விழுந்தது. மாமியாரின் அலறல் சத்தம் கேட்டு சுப்புலட்சுமி சென்று பார்த்தார். வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து, அவர் காயம் அடைந்து இருந்தை கண்டார். உடனடியாக சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக, சம்பவ இடத்தை, காவல் உதவி ஆணையர் பார்வையிட்டார். இந்த விபத்து சம்பவத்தினால் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் பலர் பீதியில் இருந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: செருப்பு கடையில் தீ விபத்து.. மர்ம நபர் தீ வைத்ததாக பரவும் சிசிடிவி காட்சிகள்..!
காவலர் குடியிருப்பில் வசிக்கும் சிந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது: இந்த காவலர் குடியிருப்பு கட்டி 40 ஆண்டுகள் ஆவதாகவும், கடந்த 9 ஆண்டுகளாக தாங்கள் இங்கு வசித்து வருவதாகவும் தெரிவித்தார். மழைக் காலங்களில் குடியிருப்புக்குள் பாம்பு வருவதாகவும், வீடு விரிசல் ஏற்பட்டு ஒழுகுவதாகவும், வீட்டை சுற்றி குப்பைகளாக காட்சியளிப்பதாகவும் இதனால் குடியிருப்பை மாற்றி தரும்படி பல முறை விண்ணப்பித்தும் அதிகாரிகள் செவிகொடுத்து கேட்பதில்லை என குற்றம் சாட்டினார் மேலும் தினமும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இங்கு வாழ்ந்து வருவதாகவும், பல பேர் காவலர் குடியிருப்பில் சொகுசாக வாழ்வதாக பேசுவார்கள், ஆனால் நாங்கள் குடிசையில் வாழ்வதை விட மோசமாக வாழ்ந்து வருகிறோம். குடியிருப்பில் பிரச்சினை ஏற்பட்டால் அதிகாரிகள் வருவார்கள், பார்ப்பார்கள், செல்வார்கள் ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் உடனடியாக மாற்றுக்குடியிருப்பை ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என கூறினார்.
காவலர் குடியிருப்பின் மேற்கூரை இடிந்து விழுந்து காவலர் தாயார் காயம் அடைந்த சம்பவம் தொடர்பாக கீழ்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரயிலில் தவறி விழுந்து வடமாநில தொழிலாளி பலி - கேரளாவுக்கு வேலைக்காக சென்றபோது பரிதாபம்!