சென்னை: புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் சுமார் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதில் 1,500 ஊர் காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மெரினா கடற்கரையில் போலீசார் போக்குவரத்து மாற்றங்கள் செய்து தடுப்புகள், பேரிகார்டுகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
குறிப்பாக, பைக் ரேஸ் மற்றும் இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வாகன தணிக்கைகளும் தீவிரமாக நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நினைவுச் சின்னம் முதல் கலங்கரை விளக்கம் வரை அனைத்து சாலைகளும் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மூடப்பட உள்ளதாகவும், அதேபோல் மெரினா கடற்கரையில் உள்ள உட்புறச் சாலைகள் இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மூடப்படும் எனவும், இதனால் அங்கு வாகனங்கள் நிறுத்த எந்த அனுமதியும் கிடையாது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 12 மணிக்கு புத்தாண்டு கொண்டாட மெரினா கடற்கரைக்கு வரும் நபர்கள் தங்கள் வாகனங்களை சிவானந்தா சாலை பாரதியார் சாலை பொதுப்பணித்துறை அலுவலகம் பின்புற சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். மாலை 6 மணி முதல் கடற்கரைக்கு செல்லும் மக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது அதற்காக மாநகராட்சி சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் கடற்கரை அதிக அளவில் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட வருகை தருவதால், ஆறாவது அவென்யூ சாலை மூடப்பட்டு போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் பகுதியில் உள்ள தேவாலயம் மற்றும் கோயிலுக்குச் செல்பவர்கள் நான்காவது மற்றும் ஐந்தாவது சாலை வழியாகச் செல்ல போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் நபர்களைப் பிடிப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் மற்றும் மெரினா கடற்கரைகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் சுமார் 6 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ட்ரோன் கேமரா மூலம் பொதுமக்களைக் கண்காணிக்கும் வகையில் போலீசார் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனங்களை இயக்கி போலீசாரிடம் சிக்கிக் கொண்டால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து விழிப்புணர்வு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, பிறகு மாற்று வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சேலம் விவசாயிக்கு அமலாக்கத்துறை சாதிப்பெயரோடு சம்மன்.. பின்னணியில் பாஜக பிரமுகரா?