சென்னை மாவட்டம் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (48). இவர் கோயம்பேடு போக்குவரத்துப் பிரிவு தலைமைக் காவலராகப் பணிபுரிந்துவருகிறார். இவருக்கும், அதே பகுதியில் வசித்துவரும் காய்கறி விற்பனையாளர் முருகனுக்கும் (40) இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகே நிறுத்துவதில் தகராறு இருந்துவந்துள்ளது.
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை (செப். 19) மதுபோதையிலிருந்த கிருஷ்ணகுமார், இருசக்கர வாகனத்தை நிறுத்தக் கூடாது எனக் கூறி முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
இதில் கிருஷ்ணகுமார், முருகனின் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்து அவரையும், அவரது குடும்பத்தினரையும் ஆபாசமாகத் திட்டியுள்ளார்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை சமாதானப்படுத்த முயன்றபோது, திடீரென ஆவேசமான கிருஷ்ணகுமார் ஆடையின்றி தெருவில் பெண்கள் முன்பு நின்றார். இச்செயலால் உடனே அக்கம் பக்கத்திலிருந்த பெண்கள் அலறியபடி வீட்டுக்குள் ஓடினார்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த முருகன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவலர்கள் நேற்று (செப். 20) வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், முருகன் அம்பத்தூரில் உள்ள மேற்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
அப்புகாரைப் பெற்றுக்கொண்ட காவலர்கள் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். குடிபோதையில் தலைமைக் காவலர் தகராறில் ஈடுபட்டு அட்டகாசம் செய்த காணொலி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டவர் மீது பாய்கிறது குண்டர் சட்டம்