திருநெல்வேலி மாவட்டம் அச்சன்புதூரைச் சேர்ந்த முகமது நயினார், தனது நண்பனின் நண்பன் சலாவுதீனுக்கு மூன்று லட்சம் ரூபாய் கடனாக வழங்கினார். கடன் பெற்ற சலாவுதீன் பணத்தை காசோலை மூலமாக வழங்கினார். காசோலையில் பணம் இல்லாததால், சலாவுதீனுக்கு சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, கடன் பெற்ற சலாவுதீன், முகமது நயினார் மீது தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காசோலையை சலாவுதீனிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் சிறையில் அடைத்து விடுவேன் என்று தென்காசி காவல் ஆய்வாளர் திருப்பதி தன்னை மிரட்டியதாகவும் முகமது நயினார் மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்தார்.
மனுவை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், முகமது நயினாரை மிரட்டியதற்காக காவல் ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், தலைமைக் காவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், பாதிக்கப்பட்ட முகமது நயினாருக்கு அத்தொகையை ஒரு மாதத்தில் வழங்கவும் உத்தரவிட்டார். மேலும், காவலர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தார்.