நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட செல்கிறது. இதில், சென்னை மாநகராட்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை சரியான முறையில் அமல்படுத்தும் வகையில் சிறப்பாக பணிபுரிந்துவரும் காவல் துறையினர் அதிகளவில் கரோனா பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர்.
சென்னையில் பணிபுரிந்துவந்த ஐபிஎஸ் அதிகாரியான துணை ஆணையருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் அவரது அலுவலகத்தில் பணிபுரிந்த இரண்டு காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் டிஜிபி அலுவலகத்தில் பணியாளராக பணிப்புரிந்துவந்த காவலர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது துறையில் பணியாற்றிவந்த இருவருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று இருப்பது தெரியவந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் இரண்டாம் நிலை பயிற்சி பெண் காவலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருடன் பயிற்சி பள்ளியில் இருந்த பெண் காவலர் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே ஒன்பது இரண்டாம் நிலை பயிற்சி பெண் காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தீயணைப்பு துறையில் பணிபுரிந்து வந்த ஒருவருக்கு கடந்த 3ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் வில்லிவாக்கத்தில் வசித்துவரும் இவரது 77 வயது தாய்க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதையும் பார்க்க: நம் சாம்பலை உன்னத மனிதர்களின் கண்ணீர் ஈரமாக்கும் - மாமேதை கார்ல் மார்க்ஸ்