சென்னையில் தலைமைச்செயலக காலனி காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பட்டினபாக்கத்தைச்சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி உயிரிழந்தார். இது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினரால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிசிஐடி பதிவு செய்துள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் மூன்றாவது நாளாக தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்காவல் படையைச் சேர்ந்த தீபக், உதவி ஆய்வாளர் கணபதி, எழுத்தர் முனாப், ஆயுதப்படை காவலர் கார்த்திக், தலைமைக்காவலர் குமார், காவலர் ஆனந்தி ஆகிய 9 காவல் துறையினரை எழும்பூரிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து 6 மணி நேரமாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
யார் முதல் குற்றவாளி? முதலமைச்சர் ஸ்டாலின் இதனை கொலை வழக்காக மாற்றிப்பதிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளதால், இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக யார் சேர்க்கப்படுவார் என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறும். அதுமட்டுமல்லாமல் மூன்றாவது நாளாக இன்று (மே 06) காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உள்பட 9 பேர் ஆஜராகினார். இதனால் இந்த வழக்கில் எத்தனை பேர் சேர்க்கப்படுவார்கள் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு இந்த வழக்கில் தொடர்புடைய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், பொன்ராஜ், தீபக் ஆகிய 3 பேரை ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்தார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் உள்பட மூவர் முதலில் கைது செய்யப்படலாம் என சிபிசிஐடி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: நெல்லையில் கொடூரம்... பாட்டியை தீ வைத்து எரித்து கொன்ற இரு பேத்திகள் கைது