சென்னை தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு ராம்ஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருள்- சுசிலா தம்பதி. இவர்களுக்கு ஜோசப்ராஜ் (23), அபிஷேக் (20) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
அபிஷேக் பல்லாவரத்திலுள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் வீட்டிலிருந்த அபினேஷ், கடந்த இரண்டு நாள்களாக ஒரகடத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்துள்ளார்.
இந்நிலையில் தாம்பரம் அடுத்த தர்காஸ் பகுதியில் அவருடன் கல்லூரியில் படித்த தோழிக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில், கலந்துகொண்ட அபினேஷ் நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துவிட்டு, உணவருந்தி விட்டு மண்டபத்திலிருந்து வெளியே வந்துள்ளார்.
அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று அபிஷேக்கை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளது. இதில், ரத்த வெள்ளத்திலிருந்த அபிஷேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் காவல் துறையினர், அபிஷேக் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அபிஷேக்கின் சகோதரர் ஜோசப் ராஜா , கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சோமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் ஒருவரை வெட்டி கொண்ட வழக்கில் ஒரு மாதத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனால், ஜோசப் ராஜாவுடன் மோதலில் ஈடுபட்ட யாரேனும் அவரது தம்பி அபிஷேக்கை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். மேலும், இந்த கொலை வழக்கில் சம்பத்தப்பட்ட அடையாளம் தெரியாத நபர்களை விரைவில் பிடிப்பதற்காக காவல் துறையினர் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.