சென்னை, கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டம் (65). இவரது மனைவி சாந்தி (55). இவர்களுக்கு ’சேட்டு’ என்ற மாற்றுத் திறனாளி மகன் உள்ளார்.
கடந்த சில மாதங்களாக சேட்டு அதே பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், மே 9ஆம் தேதி சேட்டுடன், திவ்யா மாயமானார். பின்னர், மே 12ஆம் தேதி திவ்யாவின் வீட்டார் திவ்யாவைக் கண்டுபிடித்து சமாதானம் செய்து அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்று (ஜூன்.14) காலை மீண்டும் சேட்டு, திவ்யாவை அழைத்துச் சென்றுவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த திவ்யாவின் அண்ணன் தினேஷ், தனது கூட்டாளிகளான நவீன், பெருமாள் உள்ளிட்டோருடன் சேர்ந்து நேற்றிரவு (ஜூன்.14) தங்களின் வீட்டு வெளியே நின்று கொண்டிருந்த சேட்டின் தந்தை, தாயை சுற்றி வளைத்து கத்தியால் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இந்த திடீர் தாக்குதலால் தலை, நெற்றி, கை, தோள்பட்டையில் வெட்டுக் காயமடைந்து நிலைகுலைந்த சேட்டின் தாய் தந்தையரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்ட கோட்டூர்புரம் காவல் துறையினர், தினேஷின் பெற்றோர், மனைவி ஆகியோரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும், தலைமறைவாகவுள்ள தினேஷ், அவரது கூட்டாளிகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.