சீனா அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி சந்திப்பு காரணமாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. இரு நாட்டு தலைவர்களையும் வரவேற்கும் விதமாக தமிழக அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், கலாச்சார நிகழ்வுகளும் தடபுடலாக நடைபெற்றுவருகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ஆயிரக்கணக்கான காவலர்கள் இரவு பகலாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக இன்றும் கோவளம் பகுதியில் பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திக்கின்றனர். தலைவர்களை வரவேற்பதற்காக தமிழக அரசு சார்பில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் விதமாக நடன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
![police](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-police-helps-dancer-mahabalipuram-script-photos-7202809_12102019100516_1210f_1570854916_170.jpg)
பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு மணி நேரம் முன்கூட்டியே நடன கலைஞர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அப்போது வெகுநேரமாக நின்றிருந்தால் பொய்க்கால் குதிரை நடனக் கலைஞர் ஒருவர் நிற்க முடியாமல் தள்ளாடினார். அப்போது அருகிலிருந்த காவலர் ஒருவர் தனது கையை உயர்த்தி பிடித்து நடனக் கலைஞர் நிற்பதற்கு உதவி செய்தார். இந்த படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
![police](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-police-helps-dancer-mahabalipuram-script-photos-7202809_12102019100516_1210f_1570854916_223.jpg)
ஏற்கனவே வழிநெடுகிலும் இருநாட்டுத் தலைவர்களுக்கு பாதுகாப்பு பணிகளுக்காக வெளியூர்களில் இருந்து வந்த காவலர்கள் இரவு சாலையோரங்களில் பாய், போர்வை என எதுவும் இல்லாமல் மண்ணில், கொசுக்கடி மற்றும் குளிரில் படுத்திருந்த புகைப்படங்கள் வெளியாகி காண்போரை நெகிழச் செய்தது. தற்போது பொய்க்கால் குதிரை ஆட்டக் கலைஞருக்கு உதவிய இந்த ”காக்கும் கரங்களுக்கு” இணையதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
இதையும் படிங்க:மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு: செய்திகள் உடனுக்குடன்!