சென்னை: மிக்ஜாம் புயல் எதிரொலியாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் பல்வேறு முக்கிய சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் தாழ்வான இடங்களிலும் இடுப்பளவிற்கு மழை நீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
மேலும், சென்னையில் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படும் அனைத்து சுரங்கப்பாதை முழுவதும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கின்றது. இதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள சுமார் 17 போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் சுரங்கப் பாதைகளை காவல்துறை பேரிகார்டுகளை கொண்டு மூடியுள்ளனர்.
கணேசபுரம் சுரங்கப்பாதை, கெங்குரெட்டி சுரங்கப்பாதை, செம்பியம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, மவுண்ட்- தில்லைநகர் சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை- அரங்கநாதன் சுரங்கப்பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை,
CB சாலை சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, திருவொற்றியூர் - மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, RBI சுரங்கப்பாதை, கோயம்பேடு - புதுபாலம் சுரங்கப்பாதை, சேத்துப்பட்டு - ஹாரிங்டன் ரோடு சுரங்கப்பாதை, சூளைமேடு - லயோலா சுரங்கப்பாதை ஆகிய 17 சுரங்கப்பதைகளை காவல்துறையினர் பேரிகார்டுகள் வைத்து மூடியுள்ளனர்.
மேலும், புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வைத்தியநாதன் மேம்பாலம் கீழுள்ள பிளாட்பாரம் அருகே இறந்து கிடந்த பெயர், விலாசம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் நபரின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அதேபோல், ஆர்.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொருக்குப்பேட்டை, காரனேஷன் நகரில், மரம் விழுந்து காயமடைந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ரமேஷ் என்பவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டதால் அவரை மீட்ட காவல்துறை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையை புரட்டிப்போடும் மிக்ஜாம் புயல்; இன்று இரவு வரை கனமழை தொடரும் என எச்சரிக்கை!