சென்னை: சென்னை, நங்கநல்லூர் பகுதியில் வசித்து வரும் ராமநாதன் என்பவர், கடந்த, டிசம்பர் மாதம் 25ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். இதனை அடுத்து அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவல் அடிப்படையில், உடனடியாக வீடு திரும்பிய அவர், இது குறித்து பழவந்தாங்கல் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு, கை ரேகை நிபுணர்களுடன் வந்த பழவந்தாங்கல் போலீசார், தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதில் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 35 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த பழவந்தாங்கல் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வந்தனர். அப்பகுதியில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்ததில், இத்திருட்டில் பல்லாவரத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் (வயது 65) ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
மேலும் இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 250 வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இந்த தகவலின் அடிப்படையில் கமலக்கண்ணனை ரகசியமாகப் பின்தொடர்ந்ததில், அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பேருந்தில் சென்று கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பேருந்து உடனடியாக சுற்றி வளைத்த போலீசார், கமலக்கண்ணனை கைது செய்து சென்னை அழைத்து வந்து உள்ளனர்.
கைது செய்யப்பட்ட கமலக்கண்ணனிடமிருந்து பழவந்தங்களில் திருடிய 35 சவரன் நகை மற்றும் அதற்கு முன்னதாக தாம்பரம் பகுதியில் திருடிய 29 சவரன் நகை என மொத்தம் 64 சவர நகையை போலீசார் மீட்டனர். மேலும் கமலக்கண்ணன் மீது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காவல்நிலையங்களில் 33க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
தனிநபராகவே சென்று பூட்டி கிடக்கும் வீட்டைக் குறி வைத்து, கடப்பாரை மற்றும் சுத்தியல் கொண்டு உடைத்து, தொடர் திருட்டில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது. கமலக்கண்ணன் ஆரம்பக் காலத்தில் திருட்டில் ஈடுபட்டு வந்ததால், இவரது மனைவி மற்றும் குழந்தைகள் இவரை விட்டுப் பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இவர், தொடர் திருட்டில் ஈடுபட்டு, திருடிய நகைகளை வைத்து வெளி மாநிலங்களுக்குச் சென்று உல்லாசமாக இருந்தும் தெரிய வந்தது.
கடந்த, ஆறு மாதங்களுக்கு முன்பு குரோம்பேட்டையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஐடி ஊழியரின் வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டி இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பகுதிக்கு வந்து, அருகில் உள்ள சிசிடிவி கேமராக்கள் அனைத்தையும் திருப்பி வைத்து விட்டு 50 சவரன் நகை கொள்ளை அடித்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
மேலும், குரோம்பேட்டை பகுதியில் கொள்ளையடித்த போது கமலக்கண்ணனின் கூட்டாளி பம்மல் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 30), தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (35), கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கணபதி (45) ஆகியோருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட கமலக்கண்ணன் உட்பட நான்கு பேரிடமும் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை குற்றச்செய்திகள்: சென்னையில் 911.4 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்.. 47 நபர்கள் கைது!