சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அயோத்தியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், தேமுதிக செங்கல்பட்டு மாவட்ட மகளிரணி நிர்வாகி ஜீவா(40). இவரது கார் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைப்பது வழக்கம். அதே போல் கடந்த 7ஆம் தேதி கார் நிறுத்தியிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் காரின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் காரின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஜீவா புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டது குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜோதிபாசு(28) என்பதை கண்டறிந்தனர்.
அதனடிப்படையில் காவல் துறையினர் ஜோதிபாசுவை தேடி வந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி குரோம்பேட்டை காவல் துறையினர் ஜோதிபாசை கத்தி காட்டி மிரட்டிய வழக்கில் கைது செய்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அவரிடம் சங்கர் நகர் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பம்மல் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை(29) என்பவர் தனது மாமா, அப்துல்லா என்பவர் ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் சிறைக்குச் செல்ல ஜீவா தான் காரணம். எனவே அவரின் கார் கண்ணாடியை உடைக்க சொன்னார். இதனால் நானும் என் நண்பன் கார்த்திக்கும் சேர்ந்து கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக சங்கர் நகர் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் கார்த்திக் என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த ஏழுமலையை சங்கர் நகர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.