சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலத்திற்கு, ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் தரப்பில் புகார் மனு வந்துள்ளது. அதில் ஆர்.பி.ஐ.யிடம் உரிய அனுமதி பெறாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் அமைத்து ஊரக மற்றும் வேளாண்மை விவசாய கூட்டுறவு வங்கி (RAFC) என்ற பெயரில் போலி வங்கி இயங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார், சென்னை அம்பத்தூரில் கார்ப்பரேட் அலுவலகம் அமைத்து வங்கி மோசடியில் ஈடுபட்டு வந்த சந்திர போஸ் என்பவரை கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், உண்மையான வங்கியை போல் இருக்க போலி இணையதளம், பாஸ்புக், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், நகை மற்றும் வங்கிக் கடன் அட்டைகள், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை, வைப்பு தொகை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் RAFC வங்கி என்ற பெயரில் அச்சடித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது தெரியவந்தது.
மேலும் திருமங்கலம், நாமக்கல், திருவண்ணாமலை, விருதாச்சலம், பெரம்பலூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கிளைகளை அமைத்து, அதில் பொது மக்களை வாடிக்கையாளர்களாக இணைத்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
லண்டனில் எம்.பி.ஏ. பட்டம் பெற்று தமிழ்நாட்டில் மோசடி செய்த சந்திரபோசிடம் நடத்திய விசாரணையில், 2016 ஆம் ஆண்டிலே கூட்டுறவு சொசைட்டி போல் போலி நிறுவனத்தை உருவாக்கி, பின்னர் அதை வங்கியாக மாற்றி பொது மக்களை மோசடி வலையில் சிக்க வைத்தது தெரியவந்தது.
தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 3 ஆயிரம் வாடிக்கையாளர்களிடம் 2 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் 57 லட்ச ரூபாய் வரை முடக்கி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் மத்திய மற்றும் மாநில அரசு வங்கிகளில் உள்ளது போல் பல்வேறு கவர்ச்சிகர கடன் திட்டங்களை அறிவித்து மோசடியில் ஈடுபட திட்டமிட்டது தகர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பிரபல தனியார் வங்கியில் கார்ப்பரேட் கணக்கு தொடங்கி, அதன் பரிவர்த்தனை படிவங்களை RAFC வங்கி என்ற பெயரில் போலியாக அச்சடித்து, வாடிக்கையாளர்களை அதில் கீழ் கணக்குகளாக இணைத்து பண மோசடி நடைபெற்று இருப்பது தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறினர்.
ரிசர்வ் வங்கியிடம் முறைப்படி அனுமதி பெற்றது போல் காண்பிக்க, அசல் ஆவணங்களை போலியாக அச்சடித்தும், வேலை தருவதாக பட்டதாரி இளைஞர்களிடம் 7 லட்ச ரூபாய் முதல் பெரும் தொகையை பெற்று பணியமர்த்தியது உள்ளிட்ட பல்வேறு ஏமாற்று வேலைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வேலைக்கு பணியமர்த்தப்பட்ட இளைஞர்கள் மோசடி குறித்து தெரிந்தே பணிபுரிந்தனரா எனவும் விசாரித்து வருவதாக போலீசார் கூறினர்.
வங்கிக் கணக்கில் உள்ள 57 லட்ச ரூபாய் பணம், சந்திரபோஸின் சொகுசு கார், கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கிளை அலுவலகங்களில் உள்ள ஆவணங்கள், சந்திர போஸ்க்கு உடந்தையாக இருந்த நபர்கள் யார் யார் என்றும் விசாரித்து வருவதாக போலீசார் கூறினர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு ஆளுநரை திரும்பபெற வேண்டும்; எம்.பி.க்களின் மனு குடியரசு தலைவர் அலுவலகத்தில் ஒப்படைப்பு