சென்னை: தாம்பரம் அடுத்த முடிச்சூர் கக்கன் தெருவைச் சேர்ந்தவர் கெங்கையம்மாள் (51). இவர் கட்டடத் தொழிலாளி. இவர் கடந்த மாதம் 25ஆம் தேதி கட்டட வேலைக்குச் செல்வதற்காக தாம்பரம் கிருஷ்ணா நகர் பகுதியில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது காஞ்சிபுரம் செட்டியார் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் (40) என்பவர் கட்டட வேலை இருப்பதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் கெங்கையம்மாளை அழைத்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து ஏகாம்பரம் கெங்கையம்மாளை பாழடைந்த கட்டடம் ஒன்றில் அடைத்துவைத்து, கட்டையால் தாக்கியுள்ளார். பின்னர் கெங்கையம்மாள் அணிந்திருந்த நான்கு சவரன் நகை, வெள்ளி கொலுசு, செல்போன் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு ஏகாம்பரம் தப்பிச் சென்றுள்ளார்.
மண உறவைத் தாண்டிய காதல்
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் கெங்கையம்மாளை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு, நெற்றிப் பகுதியில் மூன்று தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இச்சம்பவம் குறித்து பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ஏகாம்பரத்தைத் தேடிவந்தனர். இந்நிலையில் ஏகாம்பரத்தை மாங்காடு அருகே உள்ள சிக்கராயபுரத்தில் வைத்து காவல் துறையினர் கைதுசெய்து காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கெங்கையம்மாளுக்கும் ஏகாம்பரத்துக்கும் பல மாதத்திற்கு முன்பு ஒரு இடத்தில் கட்டட வேலை செய்துகொண்டிருந்தபோது, மண உறவைத் தாண்டிய காதல் இருந்துவந்ததாகவும், 25ஆம் தேதி அன்று கெங்கையம்மாளிடம் ஏகாம்பரம் பணம் கேட்டதாகவும் தெரிகிறது.
அவர் தர மறுத்ததால் கெங்கையம்மாளை அழைத்துச் சென்று தாக்கி நகைகளைப் பறித்துச் சென்றதாக காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து ஏகாம்பரத்திடம் தங்க நகைகளைப் பறிமுதல்செய்து, நீதிமன்றம் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: காரைக்கால் டு மும்பை: ரயிலில் கடத்தப்பட்ட மதுபானங்கள்