சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று மதியம் 12.30 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இன்று (ஜூன் 21) மதியம் 1.30 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்து தெரிவித்துவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டார்.
உடனடியாக இந்த தகவலின் அடிப்படையில் சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினர் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகளின் உடைமைகள் மற்றும் ரயில்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது புரளி என்பது தெரியவந்ததுள்ளது.
இதனையடுத்து, வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்த செல்போன் எண்ணை வைத்து காவல் துறையினர் விசாரணை செய்தனர். அப்போது, போலியான மிரட்டல் விடுத்தது வியாசர்பாடியைச் சேர்ந்த 21வயதான மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் என்பது தெரியவந்தது. இதையடுத்து வியாசர்பாடி காவல் துறையினர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருந்ததாக மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் இவர் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதும், கடந்த ஏப்ரல் மாதமும் இதேபோல் இவர் தன்னுடைய தந்தையின் மொபைலில் இருந்து ஏற்கனவே ஒருமுறை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அப்போது காவல் துறையினர் அவரை எச்சரித்து அனுப்பியதும் தெரியவந்தது.
மேலும் இவர் இரண்டு மாதத்திற்கு முன்பு கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். தற்போது தன் வீட்டில் தங்கி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை மற்றும் மனைவி சில உடல் நல பிரச்னை சம்மந்தமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர், அவரது தந்தையின் செல்போன் மூலம், மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்ததுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்ததுள்ளது. மேலும், இவர் நேரத்தை கவனிக்காமல், குண்டு வெடிப்பதாக கூறிய நேரத்தை மாற்றி கூறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினர், மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரின் பெற்றோரை வரவழைத்து எழுதி வாங்கிக் கொண்டு இளைஞரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, காவல் துறையினர் திடீரென சோதனை செய்ததில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க: கேட்டை உடைத்துக் கொண்டு கோயிலுக்குள் புகுந்த பாகுபலி யானை: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!