சென்னை: தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குபதிவானது நேற்று நடந்து முடிந்தது. இதையடுத்து வாக்குபெட்டி இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் லயோலா கல்லூரியில் வாக்குச்சாவடி மையத்திற்கு போடப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் நேற்று சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குபதிவு சுமூகமாக நடைபெற்றது. அனைத்து தொகுதி வாக்குசாவடி மையங்களிலிருந்தும் வாக்குப் பெட்டிகள் சீலிடப்பட்டு ராணிமேரி கல்லூரி ,லயோலா கல்லூரி, மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய நான்கு இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இயந்திரங்களை பாதுகாப்பான அறையில் வைத்து மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதலாவதாக துணை ராணுவ படையினரும், இரண்டாவதாக தமிழ்நாடு சிறப்பு காவல்படையினரும், மூன்றாவதாக உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர அறையில் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களிலும் 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று கூடுதலாக பாதுகாப்பு வழங்கப்படும். சென்னையில், தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார்.