சென்னை: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கும்,பொது இடங்களில் சிலை வைப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் அவரவர் வீடுகளில் சிலையை வைத்து வழிபட வேண்டும் என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. மேலும் தங்களது வீட்டுக்கு அருகாமையில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைக்குமாறும் அறிவித்திருந்தது.
இந்நிலையில் பட்டினப்பாக்கத்தில் சிலைகளை கரைப்பதற்கு வரும் பொதுமக்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அவரவர் வீடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சிலைகளை காவல் துறைக்கு தயார் செய்யப்பட்ட மூன்று லோடு ஆட்டோக்களில் சிலைகள் அனைத்தையும் ஏற்றி காவல் துறையினரே கடலில் கொண்டு கரைக்கின்றனர்.
இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து கொண்டு வரும் விநாயகர் சிலைகளை சாலையிலேயே வைத்து பூஜை செய்து காவல் துறையினர் ஏற்பாடு செய்த வாகனங்களில் ஏற்றி அனுப்புகின்றனர். மேலும் கடற்கரையில் தேவையில்லாமல் பொதுமக்களின் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் காவல் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
குறிப்பாக லூப் சாலை முதல் கலங்கரை விளக்கம் வரை சட்டம் ஒழுங்கு காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், போக்குவரத்து காவலர்கள் என சுமார் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். தடையை மீறி கடற்கரைக்கு செல்ல முற்பட்டாள் காவல்துறையினர் வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்து வருகிறார்கள்.
இதையும் படிங்க:விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற சிறுவர்கள் உயிரிழப்பு!