சிவகங்கை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் சத்தியவாணி(27). இவர், ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வரும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரைக் காதலித்து, கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை வடபழனி கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். ஆனால், இந்தத் திருமணத்திற்கு ராஜாவின் பெற்றோர் சம்மதிக்காததால் அவர்களுக்குத் தெரியாமல் சத்தியவாணியை ராஜா திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
ராஜா சென்னையில் பணிபுரிவதால் இருவரும் சென்னை திருமங்கலம் பாடி புதுநகரில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சத்தியவாணிக்குப் பெண் குழந்தை பிறந்து, 5 நாட்களில் இறந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சத்தியவாணி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அப்போது, ராஜா பயிற்சிக்காக ராஜபாளையம் செல்வதாக சத்தியவாணியிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் பயிற்சி முடிந்து அக்டோபர் மாதம் வீட்டிற்கு வந்த அவரின் நடவடிக்கை சரியில்லாததால், அவருடைய செல்போனை சத்தியவாணி ஆராய்ந்தபோது, அவரது உறவுக்காரப் பெண்ணுடன் ராஜாவுக்குத் திருமணம் ஆன புகைப்படம் இருந்ததைக் கண்டுள்ளார்.
இதில் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், ராஜா மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் காவல் ஆணையர் அலுவலகத்தில் சத்தியவாணி புகார் அளித்துள்ளார்.
இதன்பின்பு செய்தியாளர்களிடம் சத்தியவாணி, 'ராஜா நிலம் வாங்கப்போவதாகக் கூறி, தன்னிடமிருந்து ஆறரை சவரன் நகை மற்றும் பணத்தை பெற்றுச் சென்று வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார். அவர் காவலர் என்பதால் முறையான நடவடிக்கை எடுக்காமல், முதல் தகவல் அறிக்கையில் காவல் துறையினர் வரதட்சணைக் கொடுமை என்று பொய்யாக குறிப்பிட்டுள்ளனர்' எனத் தெரிவித்தார்.
மேலும், தன்னை விவாகரத்து செய்யாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்த காவலர் ராஜா மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழப்பு!