சென்னை: சென்னையை அடுத்த தாம்பரம் கடப்பேரி பஜனை கோயில் பகுதியில், புரட்சி பாரதம் கட்சி சார்பாக அம்பேத்கர் சிலை ஒன்று புதிதாக கடந்த மாதம் வைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த சிலை அனுமதி இன்றி வைக்கப்பட்டதாகக் கூறி தாம்பரம் காவல்துறை துணை ஆணையர் அதிவீரபாண்டியன் தலைமையிலான காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், நேற்று (மே 4) இரவு சிலையை அகற்ற வந்தனர்.
அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதில் புரட்சி பாரதம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சியினரும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, அதே பகுதியில் வசிக்கும் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து இன்று (மே 5) இந்த பிரச்னை தொடர்பாக பேசி சுமுகமான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேயர் வசந்தகுமாரி உறுதி அளித்தார். இதன் அடிப்படையில், அனைவரும் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
இதையும் படிங்க: அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடிய விசிக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் மீது வழக்குப்பதிவு!