சென்னை புறநகர்ப் பகுதியான ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர், பூந்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று (மார்ச் 25) மாலை தாமோதரன் திருநின்றவூர், அருகே பிரகாஷ் நகரில் வசித்து வரும் தெரிந்த பெண்மணி வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு, திடீரென்று இரு இளைஞர்கள் வந்துள்ளனர்.
அவர்கள் அந்தப் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தாமோதரன் அவர்களைத் தட்டிக் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், இளைஞர்கள் இருவரும் தாமோதரனை மறைத்து வைத்திருந்த கத்தியால் தலையில் வெட்டியுள்ளனர்.
இதில், தாமோதரன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த இரு இளைஞர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன் பின்னர், தாமோதரனை அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் மீட்டு ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
அதன் பின்னர் தகவலறிந்து வந்த திருநின்றவூர் காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்து எஸ்ஐ தாமோதரனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் தாமோதரனைக் கத்தியால் வெட்டியது வில்லிவாக்கம், பகுதியைச் சார்ந்த விஜய் மற்றும் ஆவடி அடுத்த அன்னம்பேடு, பெருமாள் கோயில் தெருவைச் சார்ந்த இளவரசன் எனத் தெரியவந்தது.
இதனையடுத்து, காவல்துறையினர் தலைமறைவாக இருந்த விஜய் என்பவரை அன்றைய தினம் இரவே கைது செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாகத் தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளி இளவரசனை திருநின்றவூர் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: Watch Video: முதியவரை அடித்து கீழே தள்ளிய அதிமுக மகளிரணி செயலர்