தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா போன்ற போதைப்பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் எனத் தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து பல இடங்களில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் எம்.கே.பி. நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் வியாசர்பாடி பகுதியிலுள்ள அனைத்து இடங்களிலும் நேற்று (டிசம்பர் 7) அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது எம்.கே.பி. நகர் 14ஆவது குறுக்கு தெரு பகுதியில் பெட்டிக்கடை ஒன்றில் சில நபர்கள் சந்தேகப்படும்படி வந்துசெல்வது தெரியவந்தது. உடனே அந்தக் கடையில் நுழைந்து காவலர்கள் சோதனை செய்தபோது அங்கு 123 கிலோ குட்கா பொருள்கள் மறைத்து விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.
பின்னர் கடையிலிருந்த கண்ணனை (51) காவலர்கள் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டபோது, அதே பகுதியைச் சேர்ந்த முகமது சிக்கந்தர் (38) என்ற நபரிடமிருந்து குட்கா பொருள்கள் வாங்கி விற்பனை செய்துவந்ததாகத் தெரிவித்தார்.
கண்ணன் கொடுத்த தகவலின்பேரில் சிக்கந்தரையும் கைதுசெய்து இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மளிகைக் கடையில் குட்கா பதுக்கிவைத்திருந்தவர் கைது