சென்னை: பல்லாவரத்தில் இருந்து திருநீர்மலை செல்லும் பிரதான சாலையில் நாகல்கேணி சந்திப்பு அருகே அரசுக்கு சொந்தமான மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு டாஸ்மாக் கடை மூடிய பிறகு, அருகேயுள்ள பாரில் கள்ளச் சந்தையில் மது விற்பனை ஜோராக நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதில், பம்மலை சேர்ந்த நந்தகோபால் (வயது 38) என்பவர் பார் மற்றும் அருகில் உள்ள உணவகத்திற்கு மேற்பார்வையாளராக பணியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அங்கு வந்த இரண்டு நபர்கள் திடீரென பாரில் காலியாக இருந்த பீர் பாட்டிலை எடுத்து நந்தகோபாலின் கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த நந்தகோபால் நிலை தடுமாறி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனடியாக சக பணியாளர்கள் அவரை மீட்டு பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். மேலும் இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் சங்கர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நந்தகோபாலிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நாகல்கேணி பகுதியை சார்ந்த சபரீசன் (வயது 23) கார்த்திக் (வயது 24) என்பது தெரியவந்தது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அன்பு என்பவர் பாரில் வைத்து அரசு நிர்ணயித்த நேரத்தை தாண்டியும் மது விற்பனையில் ஈடுபட்டதாகவும் அப்போது மது வாங்க வந்த கார்த்தி மற்றும் சபரீசன் ஆகிய இருவரும் அதிக விலையை விட இரு மடங்கு அதிகப்படியான விலைக்கு ஏன் விற்பனை செய்கிறீர்கள் என கேட்டு தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் சபரீசன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் அன்பை சரமாரியாக முகத்தில் குத்தி தாக்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் நந்தகோபால் புகார் அளித்து உள்ளார். அப்போது சங்கர் நகர் காவல் நிலையத்தில் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் பேசி அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு பதியப்பட்ட இந்த வழக்கிற்கு நந்தகோபால் தான் காரணம் என்ற எண்ணத்தில், அவரை பார்த்தவுடன் ஆத்திரமடைந்த சபரி மற்றும் கார்த்திக் கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து அவரின் கழுத்தில் சரமாரியாக குத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதனைத் தொடர்ந்து போலீசார் நாகல்கேணியில் இருந்த கார்த்தி மற்றும் சபரீசன் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் பாரில் நடைபெற்ற கைகலப்பின் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.