சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் ஆர்.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன்(28). மென்பொறியாளரான இவர் அந்தப் பகுதியில் நான்கு வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சாந்தி என்பவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும் இடையே குப்பை கொட்டுவதில் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் இரு குடும்பத்தினரிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வழக்கம்.
இந்நிலையில் மீண்டும் இரு தரப்பினருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நாகேந்திரன் விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தப்படும் துப்பாக்கியை எடுத்து வந்து நான்கு முறை வானத்தைப் பார்த்து சுட்டுள்ளார்.
துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அலறியடித்து ஓடி வந்து பார்த்துள்ளனர். உடனே இது குறித்து போரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இரு வீட்டுக்கும் இடையே குப்பை கொட்டுவது, கழிவுநீர் விடுவது தொடர்பாக தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. இதனால், நாகேந்திரன் துப்பாக்கியால் சுட்டு மிரட்டியதும் தெரியவந்தது.
நாகேந்திரன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வம் உள்ளவராம். அதற்காக விளையாட்டு போட்டிகளில் பயன்படுத்தும் துப்பாக்கியை ஆன்லைனில் வாங்கி வைத்துள்ளார். இதில் உண்மையான தோட்டாவை பயன்படுத்த முடியாது. ரப்பர் தோட்டாவை பயன்படுத்தி சுட்டுள்ளார்.
இதையடுத்து நாகேந்திரனை கைதுசெய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நெடுஞ்சாலையில் விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு நிவாரணத் தொகை அறிவிப்பு