சென்னை: கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை சந்திப்பில் கொடுங்கையூர் போலீசார் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக ஆறு பேர் வந்தனர். போலீசார் அவர்களைப் பிடிக்க முற்பட்டபோது ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் சிக்கினர். மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் தப்பி ஓடினர்.
அவர்களது வண்டியிலிருந்து இரண்டு கத்திகள் கீழே விழுந்தன. இதனால் போலீசார் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். அப்பொழுது அவர்கள் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் கீழே விழுந்ததில் அந்த வாகனத்தில் சென்ற மூன்று பேரும் காயமடைந்தனர். இதில் இருவருக்கு கை முறிந்தது.
இதனை அடுத்து அவர்களை போலீசார் விசாரணை செய்தபோது கொடுங்கையூர் ஆர்ஆர் நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (19), வெங்கடேஷ் என்கின்ற தக்காளி (22) பிரவீன் குமார் (21), செல்வகுமார் (19), கார்த்திகேயன் (24), வின்சென்ட் (25) என்பது தெரியவந்தது.இதில் கீழே விழுந்ததில் வெங்கடேஷ் என்கின்ற தக்காளி மற்றும் பிரவீன் குமார் ஆகிய இருவருக்கும் வலது கை உடைந்தது.
இவர்கள் ஆறு பேரும் மது போதையில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பில் கலெக்டர், கிளார்க் பணியிடை நீக்கம்: நெல்லை மாநகராட்சி ஆணையர் அதிரடி!