சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முட்டை வியாபாரி ராஜகுமாரி. இவருக்குச் சொந்தமான லாரியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார். இவரிடம் 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து நாமக்கல்லில் முட்டை கொள்முதல் செய்து வருமாறு ராஜகுமாரி அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு (ஜூன் 4) ராஜகுமாரிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட உதயகுமார், விழுப்புரம் மாவட்டம் சலவாதி அருகே லாரியை நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நான்கு பேர் பணத்தை பிடுங்கிச் சென்றதாக கூறியுள்ளார்.
பின்னர், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரோஷனை காவல் துறையினர், ஓட்டுநர் உதயகுமாரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், லாரி உரிமையாளர் கொடுத்த பணத்தை தனது குடும்ப வறுமையின் காரணமாக, நண்பரிடம் கொடுத்துவிட்டு இது போன்று தவறுதலாக நாடகம் ஆடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.