சென்னை பாண்டி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்த். இவர் கட்டட உள்கட்டமைப்பு பணி செய்து வருகிறார். இவர் தொழில் சம்மந்தமாக பேச தனது நண்பர்களுடன் நட்சத்திர ஹோட்டலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நவம்பர் 24 ஆம் தேதி வழக்கம்போல் தனது நண்பர்களை சந்திக்க ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது இவருக்கு அருகில் பிரவீன், சீனிவாசன் உள்பட ஐந்து பேர் மது அருந்தியுள்ளனர்.
பின்னர் இவர்கள் அருந்திய மதுபானத்திற்கு பில்லை செலுத்துமாறு ஹேமந்திடம் கூறியுள்ளனர். அதற்கு ஹேமந்த் பணம் இல்லை என்று கூறினார். இதனையடுத்து ஹேமந்தை அவர்கள் தாகவார்த்தைகளால் திட்டினர். தொடர்ந்து கார் பார்க்கிங்கில் வைத்து தூப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் அவர்கள் தாங்கள் துப்பாக்கியை உரிமம் பெற்று வாங்கியுள்ளதாகவும் ஹேமந்தை மிரட்டியுள்ளனர்.
![arrest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5283668_arrs.jpg)
இது தொடர்பாக ஹேமந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களைத் தேடிவந்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் இருவரும் அதே நட்சத்திர ஹோட்டலில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
விசாரணையில் பிரவீன் என்பவர் சினிமா விநியோகஸ்தராகவும் சீனிவாசன் கட்டுமான நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரிடமும் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.