சென்னை: தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் ஜட்ஜ் காலனியில் வசித்து வருபவர் ராதிகா (70). இவர் நேற்று இரவு (ஜூன் 09) வீட்டில் சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
அப்போது மூதாட்டி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் செயினை பறித்துக் கொண்டு ஓடிய நபரை மடக்கி பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற காவல் துறையினர் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
விசாரனையில் அவர் வந்தவாசியைச் சேர்ந்த மோகன்குமார் (37) என்பது தெரியவந்தது. மேலும் அவர் கூறியதாவது, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வேலை தேடி சென்னைக்கு வந்தபோது கரோனா காலகட்டம் என்பதால் யாரும் வெளியில் செல்லக்கூடாது என்பதால் சொந்த ஊருக்கு செல்ல முடியாததால் சாலையில் தஞ்சம் அடைந்து விட்டேன்.
அப்போது நான் சாலையோரம் இருக்கும்போது தொண்டு நிறுவனம் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் மூன்று வேளையும் உணவளித்து வந்தனர். மூன்று வேளையும் உணவு கிடைத்ததால் வேலைக்கு செல்லாமல் சாலையோரம் தங்கி இருந்தேன். கடந்த சில மாதங்களாக யாரும் உணவு தரவில்லை உணவின்றி தவித்து வந்ததால் உடலும் மெலிந்து போனது. வேலை கேட்டு சென்ற இடத்தில் யாரும் எனக்கு வேலை தரவில்லை.
உணவு தேடி பல இடங்களில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் போது சிட்லபாக்கத்தில் வீடு திறந்து இருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்தேன் பாட்டியின் கழுத்தில் தங்கச்சங்கிலியை பார்த்ததும் தங்கச்சங்கிலியை அறுத்து கொண்டு தப்பித்துச் சென்று செயினை விற்று பசியாற்றி கொள்ளலாம் என்று நினைத்தேன், ஆனால் அதற்குள் பொதுமக்கள் என்னை பிடித்துவிட்டனர்.
நான் கடந்த ஜந்து நாள்களாக பசியால் இருந்ததால் தான் என்னை பொதுமக்கள் பிடித்து விட்டனர் எனவும் பசிக்காக தான் வயதான பாட்டியிடம் இருந்து செயினை திருடியதாக ஒப்புக் கொண்டார். பின்னர் மோகன குமார் மீது காவல் துறையினர் இறக்கப்பட்டாலும் வயிற்றுப் பசிக்காக செயின் பறிப்பில் ஈடுபட்டது குற்றமே என கூறி மோகன குமார் மீது வழக்குப்பதிவு செய்து 4 சவரன் செயினை பறிமுதல் செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மோகன குமார் சிறைக்குச் செல்வதற்கு முன்பு சிறையில் உணவு அளிப்பார்களா என காவல் துறையினரிடம் அவர் கேட்டுக்கொண்டு சிறையில் உணவு அளித்தால் எத்தனை நாள்கள் வேண்டும் என்றாலும் சிறையில் இருக்க தயாராக இருக்கிறேன் என கூறி சென்றார்.
இதையும் படிங்க: "நான் அவள் இல்லை" - 7 பேரை திருமணம் செய்து மோசடி செய்த 'பலே' பெண்