சென்னை : எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்டோருக்கு பாடல்கள் எழுதி புகழ் பெற்றவர் கவிஞரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தன். இவர், எம்ஜிஆரின் குடியிருந்த கோயில் படத்தில் நான் யார் நான் யார் நான் யார் பாடல் மூலம் புகழ்பெற்றவர். அதன்பிறகு எம்ஜிஆரின் அடிமைப் பெண், உலகம் சுற்றும் வாலிபன் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
வடிவேலுவின் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, தெனாலிராமன், எலி உள்ளிட்ட படங்களுக்கும் பாட்டு எழுதியுள்ளார். இந்நிலையில் பாடலாசிரியர் புலமைப்பித்தன் கடந்த மாதம் 31 ஆம் தேதி நள்ளிரவு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை சார்பில் சில தினங்களுக்கு முன் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று (செப்.8) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட புலமைப்பித்தன் சென்னை சாந்தோம் உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அக்ஷய் குமார் தாயார் காலமானார்!