சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த 30 வயது இளைஞர். கடந்த 2016ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக மிரட்டி பாலியல் வன்முறை செய்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பரமக்குடி காவல் நிலையத்தில் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம், அந்த நபர் மீது பாலியல் வன்முறை புகார் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்ய தீவிரமாக தேடி வந்தனர். ஆனால், அவர் போலீசில் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த இளைஞர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுவிட்டார் என்ற தகவல் பரமக்குடி காவல்துறைக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது.
அதன் பின்பு, அந்த இளைஞரை வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். மேலும் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அந்த இளைஞரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து விமான நிலையங்களிலும் எல்.ஓ.சியும் (Look out circular (LOC)) போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பிக் கொண்டு இருந்தனர். அப்போது, அந்த விமானத்தில் கடந்த 7ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலியல் வழக்கின் குற்றவாளியான அந்த இளைஞரும் சென்னை வந்தார். தற்போது சம்பவம் நடந்து 7ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆகையால், அனைவரும் அதை மறந்து இருப்பார்கள். இனிமேல், போலீஸ் நம்மை பிடிக்காது என்ற நினைப்பில் சென்னை வந்து சொந்த ஊர் செல்வதற்காக ஆர்வத்தில் மிதந்த அந்த இளைஞருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அப்போது குடியுரிமை அதிகாரிகள் அந்த இளைஞரின் பாஸ்போர்ட் ஆவணங்களை பரிசோதித்தனர். அதில் இவர் பாலியல் வழக்கில் ராமநாதபுரம் போலீசார் கடந்த 7 ஆண்டுகளாக தேடி வரும் தலைமறைவு குற்றவாளி என்று கம்ப்யூட்டரில் காட்டியது. இதை அடுத்து அவரை வெளியில் விடாமல் குடியுரிமை அதிகாரிகள் திசை திருப்பி மடக்கிப் பிடித்தனர். அப்போது அவர் இது பழைய வழக்கு. இந்த வழக்கு முடிந்து விட்டது என்று கூறி தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.
ஆனால், குடியுரிமை அதிகாரிகள், அவரை ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு சென்னை விமான நிலைய காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின் அந்த நபரின் காவலுக்கு போலீசையும் நியமித்தனர். அதன் பின்பு ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு 7 ஆண்டு தலைமறைவு குற்றவாளி ஓமன் நாட்டில் இருந்து வந்த போது சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார் என்ற தகவலையும் கொடுத்தனர். இதை அடுத்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து தனிப்படை போலீசார் சென்னை விமான நிலையத்திற்கு கைது செய்ய விரைந்து வந்து கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனை நோயாளி நுகர்வோரே அல்ல: நுகர்வோர் நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு!