இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாலாற்றின் குறுக்கே சட்டவிரோதமாக 21 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, இப்போது அவற்றின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. தமிழ்நாடு விவசாயிகள் நலனுக்கும், இரு தரப்பு நீர்ப்பகிர்வு ஒப்பந்தத்திற்கும் ஆந்திர அரசின் இந்த செயல் எதிரானதாகும்.
வேலூர் மாவட்டத்தையொட்டிய ஆந்திர பகுதியில் உள்ள கங்குந்தி என்ற இடத்தில் உள்ள தடுப்பணையின் உயரத்தை இப்போதுள்ள 22 அடியிலிருந்து 40 அடியாக உயர்த்தும் பணிகளை ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அணைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆற்றை தூர்வாரி அதிக அளவு நீரை தேக்குவதற்கான நடவடிக்கைகளையும் ஆந்திர அரசு செய்து வருகிறது.
கங்குந்தி பகுதியில் தடுப்பணை கட்ட ஆந்திர அரசு எந்த அனுமதியும் பெறவில்லை. கங்குந்தி தடுப்பணை மட்டுமின்றி, ராமகிருஷ்ணாபுரம், சாந்திபுரம், போகிலிரே, கிடிமாணிபெண்டா உள்ளிட்ட இடங்களில் உள்ள தடுப்பணைகளின் உயரமும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்காக ரூ.43 கோடியை ஆந்திர அரசு ஒதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது உண்மையாக இருந்தால் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளின் நலனுக்கு மிகப்பெரிய தீங்காக அமைந்து விடும்.
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டுவதை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த ஆண்டு இறுதியில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மாத இறுதியிலோ, அடுத்த மாதத் தொடக்கத்திலோ பாலாறு தடுப்பணை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், ஆந்திர அரசு தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிப்பது உச்சநீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு அடுத்த மாதத் தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் கவனமும், அரசியல் கட்சிகளின் கவனமும் தேர்தலில்தான் இருக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆந்திர அரசு இவ்வாறு செய்கிறது. சந்திரபாபு நாயுடு ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து பதவி விலகியுள்ள நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
பதவியேற்ற இரு மாதங்களுக்குள்ளாகவே, சட்டவிரோதமாக கட்டப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை சட்டவிரோதமாக உயர்த்துகிறது என்றால், பாலாற்று நீர்ப்பகிர்வு குறித்த இருதரப்பு ஒப்பந்தங்களையோ, இருதரப்பு நல்லுறவையோ துளியளவு கூட ஆந்திர அரசு மதிக்கவில்லை. ஆந்திர அரசின் இந்த அத்துமீறலை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். இது தொடர்பாக ஆந்திர அரசை கண்டிப்பதுடன், தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளை உடனடியாக கைவிடாவிட்டால் மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.