திருநெல்வேலி: அண்மையில் கடலூரில் என்எல்சி நிறுவனத்தைக் கண்டித்து பாமக நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பாமகவினர் 55 பேரை போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர்களில் 20 பேரை, நேற்று நள்ளிரவு திடீரென பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றியுள்ளனர்.
இதனையடுத்து பாமக மாநிலத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் திருநெல்வேலிக்கு வருகை தந்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள பாமகவினரை சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் சிறைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடிய பாமகவினரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூரில் இருந்த எங்கள் கட்சியினரை இன்று நான் சந்திக்க இருந்தேன். அதை தடுப்பதற்காக அவர்களை பாளையங்கோட்டை மற்றும் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்" என்று கூறினார்.
"எங்கள் போராட்டத்தில் ஒரு பத்து நிமிடம் பதற்றமான சூழல் இருந்தது. சமூக விரோதிகள் ஊடுருவி போலீசாரை தாக்கினர். இனி வேறு யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்பது தான் என்எல்சி நிறுவனத்தின் நோக்கம். ராணுவத்தையே பார்த்த நாங்கள் தமிழக காவல்துறையை கண்டு அஞ்ச மாட்டோம்" என்று தெரிவித்தார்.
64,750 ஏக்கர் விலை நிலங்களை என்எல்சி நிர்வாகத்திற்கு தமிழக அரசு குத்தகைக்கு விட்டிருக்கிறது என்று மத்திய அமைச்சர் சொல்வதாகவும், இதற்கு தமிழ்நாடு அரசும் உடந்தையாக இருக்கிறது என்றும், 3வது சுரங்கம் தொடங்க 26 கிராமங்கள் கிட்டத்தட்ட 12,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது என்றும், தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் சுட்டிகாட்டினார்.
தொடர்ந்து பேசிய பாமக தலைவர் அண்புமணி ராமதாஸ், "நானும் டெல்டாகாரன் என்று சொல்லும் முதலமைச்சர் இந்த விவகாரத்தில் பதில் என்ன? தமிழ்நாட்டில் புதிய நிலக்கரி சுரங்கம் தொடங்கப்படாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் உறுதி அளித்தார்.
ஆனால், இன்று முதலமைச்சர் ஏன் மெளனம் காக்கிறார்? பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களையும் என்எல்சி கையகப்படுத்த இருக்கிறது. விவசாயிகளின் தோழன், நண்பன் என்று சொல்ல தமிழக அரசுக்கு தகுதி இல்லை. என்எல்சி வெளியேர வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். பெரிய வியாபாரிகள், கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதரவாகத்தான் தமிழ்நாடு அரசு இருக்கிறது" என்று சுட்டிகாட்டினார்.
என்எல்சி மூன்றாவது சுரங்கத்தை தொடங்க விடமாட்டோம் என்றும், நாங்கள் தேர்தல் அரசியலுக்காக இந்த போராட்டத்தை செய்யவில்லை என்றும், என்எல்சி விவகாரத்தில் மத்திய அரசையும், மாநில அரசையும் வன்மையாக கண்டிப்பதாகவும், என்எல்சிக்கு எதிரான தங்களின் போராட்டம் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து தான் என்று கூறினார்.
"மதுவுக்கு எதிராக கனிமொழி அவர்கள் எங்களோடு இணைந்து போராட்டத்திற்கு வர வேண்டும். மதுவுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே போராடிக் கொண்டிருக்கிறது. 2026இல் எங்களோடு ஒத்த கருத்துடைய கட்சிகளோடு இணைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்காக 2024 பாராளுமன்ற தேர்தலில் வியூகம் அமைப்போம்" என்று பாமக தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காரில் நுழைந்த கொம்பேறி மூக்கன் பாம்பு: லாவகமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு