கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பாக தலா ஐந்து லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் இதனைப் பயனாளர்கள் 18 வயது பூர்த்தியாகும் போது வட்டித் தொகையுடன் எடுத்துக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது அவர்களுக்குச் சிறந்த சமூகப்பாதுகாப்பை அளிக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு அளித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூபாய் ஐந்து லட்சம் வைப்பீடு செய்யப்படும், 18 வயதில் வட்டியுடன் அத்தொகை வழங்கப்படும் என்றும் பெற்றோரை இழந்த ஒரு குழந்தையையும் தமிழ்நாடு அரசு கைவிடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது அவர்களுக்குச் சிறந்த சமூகப்பாதுகாப்பை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய அதே பொருளாதார நெருக்கடி, வருவாய் ஈட்டும் ஒரு பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும். எனவே, வருவாய் ஈட்டும் குடும்பத்தலைவரை இழந்த குழந்தைகளுக்கும் இதே உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்" என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!