சென்னை: தமிழ்நாட்டில் 2022-23ஆம் ஆண்டு சம்பா பருவ நெற்பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல இடங்களில் குறைவான காப்பீடு வழங்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று (அக்.13) வெளியிட்ட அறிக்கையில் "தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீடு அவர்களின் துயரைத் துடைப்பதை விட, அதிகரிக்கும் வகையில் தான் உள்ளது. ஏக்கருக்கு ரூ.9,484 காப்பீடாக வசூலிக்கப்படும் நிலையில், பலருக்கு வெறும் ரூ.10.41 மட்டும் தான் இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்கள் பகல் கொள்ளையர்களாக மாறி வருவது கண்டிக்கத்தக்கது. நடப்பாண்டில்தான் உழவர்களுக்கு மிகக்குறைந்தத் தொகை காப்பீடாக வழங்கப்படுகிறது என்று கூற முடியாது. 2021-22ஆம் ஆண்டிலும் சம்பா பருவத்தில் பாதிக்கப்பட்ட உழவர்களில் 90 விழுக்காட்டினருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.
மீதமுள்ள 10 விழுக்காட்டினரில் கூட பெரும்பான்மையினருக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை மட்டும்தான் இழப்பீடு வழங்கப்பட்டது. 2022-23ஆம் ஆண்டில், 24.45 லட்சம் ஏக்கர் நிலங்கள் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டன. அதற்காக செலுத்தப்பட்ட மொத்த பிரீமியம் ரூ.2,319 கோடி ஆகும். இதில் ரூ.1375 கோடியை தமிழ்நாடு அரசும், ரூ.824 கோடியை மத்திய அரசும், ரூ.120 கோடியை உழவர்களும் செலுத்தி இருக்கின்றனர்.
அதாவது, ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.9,484 காப்பீடாக செலுத்தப்படுகிறது. பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதை விட மும்மடங்கு தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என்பது விதி. அதாவது, மூன்றில் ஒரு பங்கு பயிர்கள் பாதிக்கப்பட்டு அவற்றுக்கு இழப்பீடு வழங்கப்பட்டால் கூட, காப்பீட்டு நிறுவனங்களுக்கு எந்த வகையிலும் வருவாய் இழப்பு ஏற்படாது என்பதுதான் கணக்கு.
ஆனால், 2021-22ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் சம்பா நெற்பயிர்களுக்கான காப்பீட்டு பிரீமியமாக ரூ.2,413 கோடி வசூலிக்கப்பட்ட நிலையில், உழவர்களுக்கான இழப்பீடாக ரூ.481 கோடி மட்டும்தான் காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டது. அந்த ஆண்டில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு கிடைத்த லாபத்தின் அளவு மட்டும் ரூ.1,932 கோடி ஆகும். இப்படியாக ஒவ்வொரு ஆண்டும் காப்பீட்டு நிறுவனங்களுக்குத்தான் மிகப்பெரிய அளவில் லாபம் கிடைக்கிறதே தவிர, உழவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படுவதில்லை.
கடந்த ஐந்தாண்டுகளில் பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து ஆய்வு செய்தால், பயிர் காப்பீட்டுத் திட்டம் என்பது உழவர்களுக்கானது அல்ல. காப்பீட்டு நிறுவனங்களுக்கானதுதான் என்பதை புரிந்து கொள்ள முடியும். காப்பீட்டுத் திட்டம் என்பது அதை செயல்படுத்தும் நிறுவனங்களின் நலனுக்காக இருக்கக்கூடாது; உழவர்களின் நலனுக்காகத் தான் இருக்க வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு, காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசே, பயிர் காப்பீட்டு நிறுவனம் ஒன்றை தொடங்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
இதையும் படிங்க: “காவிரி நீரை பெற்றுத் தர வேண்டுமென தமிழக அரசு நினைக்கவில்லை” - சீமான்